Wednesday, February 15, 2012

!!.........தமிழா தலை நிமிர்.....!!




 இயற்றமிழ்
இசைத்தமிழ்
                                                            


வண்டமிழ்
ஒண்டமிழ்  
                              
                              
தீந்தமிழ்
பைந்தமிழ் என்று
பன்முகங்கள் கொண்ட
பழந்தமிழை

தமிழ்த்தாயின் தலைமகனாய்
பேணுவோம்..!
தரணியிலே அதன் புகழை
போற்றுவோம்.!
எங்கும் நிலை நாட்டுவோம்
வெற்றிக்கொடி ஏற்றுவோம்...!

தமிழா...!!
கவிச்சக்ரவர்த்தி கம்பனும்
வான்புகழ் வள்ளுவனும்
இளங்கோவும்
காப்பியத்தால்
குறளால்
இலக்கண இலக்கியத்தால்
இசைந்து வளர்த்த தமிழ்- இதை
போற்றுவதே நமக்குப் புகழ்...!


அந்நியனிடமிருந்து
விடுதலை பெற
ஆனது ஆண்டுகள் இருநூறு...!!..?
அவன் மொழியின்
மோகத்திலிருந்து
விடுபடும் நாள் எப்போது...?
இனியும் தயக்கம் உனக்கேது..?
தமிழா....!
இனியும் தயக்கம் உனக்கேது..?
ஆருயிர் கொடுத்த 
அன்னையை மம்மி என்கிறாய்
தந்தையை டாடி என்கிறாய்
உயிர் கொடுக்கும் தோழனை
உந்தன் பிரண்ட் என்கிறாய்
அமுதப்பாலூட்டிய
அன்னைத் தமிழை
நீ மறப்பது நியாயமா....?
இனியேனும்
இந்த நிலை மாறுமா...?
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
அரசர் பலரும்
புலவர் பலரும்போற்றிப்
பாடி வளர்ந்த தமிழ்
பொதிகை மலை அகத்தியரும்
ஈசனுக்கு எடுத்துரைத்த
எங்கள் தமிழ்....

புலவர் தம் பாட்டுக்கு
பொருள் கொடுத்து
அவர்கள் வறுமை தீர்த்த
தமிழ்
ஆரிய மொழி தோன்றும் முன்னே
அகிலம் யாவும்
அளந்த தமிழ்
அயல் நாட்டாரும்
வியந்து பார்த்த எங்கள்
வீரத்தமிழ்.....!!!

சமயம் பல போற்றி வளர்த்து
சரித்திரம் பல கண்ட
சங்கத்தமிழ்..
வெறி கொண்ட வெள்ளையனை
விடுதலைப் பாட்டால்
விரட்டியடித்த
வீரத்தமிழ்..
தமிழ் என்றாலே அமிழ்
என்று வரும்
அதிசயங்கள் நிறைந்த
அழகுத்தமிழ்

இதைப் போற்றிடு...!!
பேணிக்காத்திடு...!!
மொழி மீட்டிடு...!!
இனம்காத்திடு..!!
தமிழா...!!
தமிழன் என்றோர் நிறமுண்டு..!
தனியே அவனுக்கோர் குணமுண்டு..!
என
தனக்கென ஒரு அடையாளம்
அரிச்சுவடுசொல்லி
உலகத்தமிழனுக்கு
அரிதாரம் பூசியிருப்பது
இந்த தமிழ் மொழி...!
என்றும் பலரை
அரியணையில் ஏற்றி
அமரச் செய்திருக்கிறது
இது
இந்நாட்டிற்காய் தோன்றிய
உதய ஒளி......!!

பாரதியும் பாரதிதாசனும்
பாடியதால்
கவிக்கோவும் கண்ணதாசனும்
இயற்றியதால்
ஏட்டிலிருந்து இமயமாக
எழுந்து நின்ற மொழி..!


வேண்டும் இன்னும்
ஓராயிரம்
வாலியும் வைரமுத்துவும்
கம்பனும் கண்ணதாசனும்
ஒரு கலைஞர் போதும்
உலகத்தமிழ் செம்மொழியாய்
உயர்த்தி நிற்கச் செய்தாரே
இது தவிர வேறென்ன வேண்டும்....?

தமிழனுக்கு


தமிழ் மொழியில் கல்வி
பொறியியலில் தமிழ்
மருத்துவத்தில் தமிழ்
அணுத்தொழில்நுட்பத்தில் தமிழ்
ஆன்மீகத்தில் தமிழ்
என்று
எங்கும் வேண்டும்
எதிலும் வேண்டும்
தமிழ்...!
தமிழர் வாழ்வோடு
எங்கும் தொடர வேண்டும்
தமிழ்.... 

இராமாயணமும் மகாபாரதமும்
சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
காலம் வென்ற
கலையும் இலக்கியமும்
சோதிடமும் வானவியலும்
சொத்தாய் பெற்றிருக்கும்
தமிழ் மொழியை போற்றுவோம்
செம்மொழியாம் தமிழ் மொழியை
சேர்ந்திங்கு
வாழ்த்திப்பாடுவோம்.....!!!

ஒல்காப்புகழ் தொல்காப்பியரும்
அவரது மாணாக்கர்
அகத்தியரும்
அணி செய்து
பத்துப்பாட்டாய்
எட்டுத்தொகையாய்
பகட்டாத
பதினெண்கீழ்கணக்குநூலாய்
பல பதுமைகள் உண்டு;
தமிழ்க்குழந்தைக்கு சூட்டும்
சிலம்பொன்று தந்த
சிலப்பதிகாரமும்
அதிலொன்று.....

பிள்ளைகளுக்கு
தமிழில் பெயர் சூட்டு....!
பெரும் தொழிற்கூடங்களுக்கு
தமிழில் பெயர் மாற்று....!
தமிழ் வழியில் பயில்பவர்களுக்கு
சலுகை காட்டு..!
இவையெல்லாம் நேருமெனில்
இமயத்தில் தமிழ் இனி ஏறும்
இனி வரும் வரலாறும்
அதன் பக்கங்களில் உன்னை ஏந்தும்
பெயராக அல்ல
உன் தோள்களுக்கு
மாலை சூட்டும் மலராக......!!!!!. 

            

No comments:

Post a Comment