காலாற நடந்து
கனிவாய் பேசிக்கொண்டு
நெடுந்தூர பயணமொன்றில்
உன்னோடு வருகிறேன்...
நம்மைக் கடக்கும்
பேருந்தின் பயணிகளுக்கு
காதலராய் தெரிந்தோமோ..?
கண்கள் உறுத்தும்
அவர்களின் பார்வை
இன்னும் துரத்திக்கொண்டிருக்கிறது..
ஒருவர் மட்டுமே
செல்ல முடிந்த
கம்பிகளால் கட்டமைக்கப்பட்ட
ஒருவழிப்பாதையில்
நீ முன்னே நடக்கையில்
பின்தொடர்ந்து நான்..
ஐந்தாறுமுறை
அறுந்துவிட்ட பாதணிகளை
உயிர்ப்பிப்பதாய் எண்ணிக்கொண்டு
விடுவதில்லாமல்
முனை வளைந்த
ஊக்கினை முயன்று
இணைக்கப் பார்க்கிறாய்...!
சில நொடிகள் நகர்கையில்
பழைய நிலைக்கே
மீண்டுவிடுகிறது... அது.
என் கரம்பற்றி
முயற்சித்தும்
பலனளிக்கவில்லை..
பைக்குள்ளிருந்த
பழைய செய்தித்தாளில்
இறுதியாய் உன்
பாதரட்சங்களை
அடக்கம் செய்து
அதன் சவத்தை
''உள்ளே வை''
என்கிறேன்...
''செருப்பின்றி நடந்த
ஞாபகமில்லை'' என்கிறாய்...!!
ஒரு சின்ன யோசனைக்குப் பிறகு ..
என் பாதணியில்
பாதம் பதிக்கிறாய் ..
அப்பப்பா...!!
அதன் பிறகும்
எத்தனை வாதங்கள் ...?..!!
நமக்குள்
வம்படித்துக்கொண்டு...!!
பிரிவுத்துயர் நெருங்குகையில்
நீ பேருந்தில்
ஏறிக்கொள்கிறாய்..
உன் தடம் பதிந்த
என் பாதணிகளை
நீக்கிவிட்டு ..
எப்பவும்போல்
அர்த்தம் விலகாத
சிரிப்பொன்றை
உன்னிடம் பெற்றுக்கொண்டு ..
கால்கள் தேய
விரைகிறேன் ...நான்
உன் பாதணிகளின் சவத்தை
கைகளில் ஏந்திய
கனத்துடன்..
நேசமிகு...
வை.ர....
No comments:
Post a Comment