”உம்பர்டோ-டி” என்றொரு
இத்தாலியத் திரைப்படம். அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்ற வயது தளர்ந்த முதியவர்
ஒருவர், தனக்கு பென்ஷன் கிடைப்பதற்காக தினமும் நடையாக நடந்து அலைந்து கொண்டிருப்பார்.
குடும்பம், உறவினர்கள் என்று யாருமில்லை. துணைக்கு அவருடன் இருப்பது ஒரு வளர்ப்பு நாய்
மட்டுமே. என்னதான் வறுமையில் இருந்தாலும், தனக்கு உணவு கிடைக்காவிட்டாலும் இருப்பதை
விற்று நாய்க்கு உணவளித்துவிடுவார். ஒரு நாள் தெருவில் சுற்றித்திரிந்த அந்த நாயை உள்ளூர்
நிர்வாகம் பிடித்துக்கொண்டு போய்விடும். விவரமறிந்த அவர் விரைவாக நகராட்சி அலுவலகம்
செல்வார். கூட்டம் கூட்டமாக நாய்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்க
இவரது நாய் அதிர்ஷ்டவசமாக காத்திருப்பில் இருக்கும். ஊழியர்களிடம் எவ்வளவோ கெஞ்சியும்
முடிந்தபாடில்லை. இறுதியில் தனது உடைமைகளை விற்று கிடைக்கும் தொகையைக் கொடுத்து அந்த
நாயை மீட்டு வருவார்.
”ஹட்சுகோ எ டாக் ஸ்டோரி”
என்றொரு சீனத் திரைப்படம். தனது எஜமானரின் மேல் மிகுந்த அன்பு வைத்திருக்கும் நாய்,
தினமும் அவர் அலுவலகம் செல்லும்போது ரயில்வே ஸ்டேஷன் வரை கூடவே செல்லும். மாலையில்
அவர் வீடு திரும்பும்போது அங்கு சென்று அவரைக் கூட்டி வரும். ஒரு நாள் அவர் விபத்தில்
இறந்துபோக, அதை உணராத அந்த நாய் தனது எஜமானர் ரயிலில் வருவார் என நினைத்து தினமும்,
ரயில் நிலையம் சென்று வருவோர் போவோரை எல்லாம் ஏக்கத்துடன் பார்க்கும். இப்படியே 10ஆண்டுகள்
கடந்துபோக அந்த நாய் அங்கேயே உயிரைவிட்டது. சீன ரயில் நிலையத்தில் அந்த நாய்க்கு சிலை
வைக்கப்பட்டிருக்கிறது. இது உண்மைச் சம்பவம்.
வெளிநாட்டில் மட்டுமல்ல நம் நாட்டிலும் இது போன்ற
சம்பவங்கள் நிகழ்வது உண்டு. வீட்டிற்குள் புகுந்த பாம்புடன் சண்டையிட்டு இறந்து தனது
எஜமானரை காப்பாற்றியது ஒரு வளர்ப்பு நாய். இது ஈரோட்டில் நடந்தது.
நாய், பூனை, முயல் என்று செல்லப்பிராணிகளை நிறைய
வளர்த்தாலும் நன்றிக்கு எடுத்துக்காட்டாக நாம் சொல்வது நாய்களைத்தான். அன்பின் பாத்திரமாக
விளங்கும் நாய்களை வீட்டின் ஒரு உறுப்பினராக நினைத்து மிகவும் செல்லம் கொடுத்து அதற்குப்
பெயர் சூட்டி வளர்ப்பவர்கள் பலர். அவரவவர் வசதிக்கேற்ப வீடு தேடிவரும் நாய்களுக்கு
அடைக்கலம் கொடுத்தோ அல்லது விலையுயர்ந்த ரக நாய்களை விலை கொடுத்து வாங்கியோ நம்மில் பலர் வளர்த்து வருகிறோம்.
ஆனால், இதற்கும் ஒருபடி
மேல் போய் தான் வளர்த்த, தன்னோடு பழகிய, பாசத்தைப் பொழிந்த செல்லப்பிராணியான நாய் இறந்தபிறகு
அதற்கு நன்றி செலுத்தும் முகமாக அதற்குக் கல்லறை கட்டி வைத்திருக்கிறார்கள் நம்மவர்கள்.
இது திரைப்படத்தில் அல்ல. நிஜத்தில்…
மைலாப்பூர் இந்துக்கள்
இடுகாட்டின் உள்ளே சென்று இடப்பக்கம் திரும்பி நேரே செல்கையில் மனிதக்கல்லறைகளுக்கு
மத்தியில் இரண்டு கல்லறைகளைக் கண்டுபிடித்தோம்.
ஒன்று குக்கீ பலராமன்.வயது
10. மற்றொன்று ஸ்வீட்டி(பெண் நாய்). வயது 7.
சென்னையில் மைலாப்பூரில்
மட்டும்தான் செல்லப்பிராணிகளுக்கான இந்தக் கல்லறைகள் உள்ளன. இதற்கு அடுத்ததாக தற்போது
கண்ணம்மாபேட்டையில் அண்மையில் தொடங்கப்பட்டுள்ள மாநகராட்சியின் விலங்குகள் சரணாலயத்தில்
பிராணிகளைப் புதைப்பதற்கான இடம் (Burial Ground) உள்ளது.
ஒரு கால்நடை மருத்துவர்,
உடன் இரண்டு உதவியாளர்கள் இங்கு பணியாற்றுகின்றனர். தினம்தோறும் தியாகராய நகர் சுற்றுப்பகுதிகளில்
களப்பணிக்குச் செல்லும் மருத்துவக் குழுவினர் தெரு நாய்களுக்குக் கருத்தடை சிகிச்சையினை
மேற்கொள்கிறார்கள். மாநகராட்சியின் இந்த கால்நடை மருத்துவமையத்தில் நாள்தோறும் பொதுமக்களும்
தங்களது வளர்ப்பு நாய்களைக் கொண்டுவந்து தேவையான தடுப்பூசிகளைப் போட்டுச் செல்கின்றனர்.
”இறந்துபோன நாய்களை திறந்த
வெளியில் விட்டுவிடுவதால் தொற்று நோய்களும் சுகாதார சீர்கேடுகளும் ஏற்படும். மாநகராட்சியின்
இது போன்ற சரணாலயங்களால் அது தடுக்கப்படும். என்கிறார் கால்நடை மருத்துவர் அருண்.
அந்த நாய்களின் கல்லறையில்
பொறிக்கப்பட்டிருந்த வாசகங்கள், பார்த்ததும் மனதுக்குள் நெகிழ்ச்சியை உண்டாக்கியது.
அதில் உள்ள ஒரு வாசகம்:
The gorgeous
A/c crazy and bestest doggy ever-thank you for 10 years of happiness. We miss
you so much and will always you. COOKKIE BALARAMAN.
ரஞ்சித் வைத்தியலிங்கம்
புகைப்படங்கள்: ஏ.ஆர்.சரவணன்