Saturday, February 4, 2012

மானே..! தேனே..! பொன்மானே..!


அன்பே...!!!






ஆயிரம்முத்தங்களுடன் ஒரு வாழ்த்து மடல்...என் உதடுகள் உச்சரிக்கும் ஓராயிரம் வார்த்தைகளையும் இந்த ஓர் மடலில் சொல்லி விட முடிமா என்ன..?

பிரியமானவளே..!!


இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம் ...ம்ம்.. இந்த அதிநவீன உலகத்தில் செல்போனில் sms ,chatting என்றுஎல்லோரும்விண்ணுக்கும் மண்ணுக்கும் போய்க்கொண்டிருக்க உன் கடிதம் வரும் நாளன்று தபால்காரனை எதிர்பார்த்து காத்திருக்கும் நேரமும் கூட சுகமே..!

இந்த அனுபவத்தை எப்படிச்சொல்வது..ம்ம்..லலலலலா...என்று உன்னை நினைக்கும் ஒவ்வொரு நொடியும் இளையராஜாவின் கீர்த்தனைகள்தான் என் நெஞ்சுக்குள் வேர்விட்டுப்பதிகிறது..

மனசெல்லாம் நிரம்பி வழிகிறது சம்திங்... சம்திங்.. தவமாய் தவமிருந்து உன்னைச்சரணடைந்தேன். என் நெஞ்சிருக்கும் வரை உனக்கு வாரணம் ஆயிரம்... ஏய்.. நீ ரொம்ப அழகா இருக்க..உன்னிடத்தில் என்னைக்கொடு என்றேன்..திருடா திருடா என்று மனதைத் திருடிவிட்டாய்.
காதலில் விழுந்தேன் ..ஆறிலிருந்து அறுபதுவரை படமும் ஆட்டோகிராப் படம் போலத்தான் தெரிகிறது.. என் செல்லமே எப்படி மனசுக்குள் வந்தாய்..?
யாரடி நீ மோகினி..?என நினைத்து ஒவ்வொரு நாளும் தூங்கா நகரமாகவே விடிகிறது இந்த தெய்வத்திருமகனுக்கு.!!.

ஆசை ஆசையாய் sms அனுப்பியும் காதலிக்க நேரமில்லை அன்பே ஆருயிரே ..! குடைக்குள் மழையாய் கண்ணுக்குள் நிலவாய் நீ நான் நிலா ..! மலை மலையாய் வந்து குவியும் உன் கடிதங்கள் என் காதல் கோட்டையின் பொக்கிசங்கள்..உன் மீது காதல் கொண்டேன் 7G ரெயின்போ காலனியிலும் அண்ணா நகர் முதல் தெருவிலும் நாடோடிகளாய் அலைந்து திரிந்தும் அலைகள் ஓய்வதில்லை போல இன்றும் அது இனிது இனிதாய் தித்திக்குதே...!! நினைத்தாலே இனிக்கிறதே..!!

செல்லமே..!! நாயகனாய் இருந்த என்னை புன்னகை மன்னனாய் ,பருத்திவீரனாய் மன்மதனாய், வல்லவனாய், அழகிய தமிழ் மகனாய், வேட்டைக்காரனாய், கோச்சடையானாய் மாற்றிய சதிலீலாவதி உனக்கு எவ்வளவு தெனாவட்டு..? என்று சொல்லத்தோன்றுகிறது...
சூரிய வம்சத்தின் கருப்பு ரோஜா இந்த ஜானகிராமன் யார் இந்த சிவப்பு ரோஜா..?அங்காடித் தெருவில் ஓர் ஏப்ரல் மாதத்தில் கானல் நீர் தோன்றிடும் மதிய வேளையில் தேநீர் விடுதியில் உன் சிரிப்புக்கு ஒன்ஸ்மோர் கேட்கும் நாள் சொல்லாமலே சொல்கிறேன் கேளடி கண்மணி அது லவ் டுடே என்பதை..!!

மைதிலி என்னைக்காதலி என்று ரயில் பயணங்களில் கூட டூயட் பாட ஆசை இந்த எந்திரனுக்கு..!
என் காதலெனும் இரண்டாம் உலகத்தில் நினைத்தேன் தென்மேற்கு பருவக்காற்றாய் தாம் தூம் என வந்தாய் . எங்கேயும் எப்போதும் இந்த மவுனகுருவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா..?? என் லத்திகா...? என் காஞ்சனா..? என் மைனா..?

                                                                           நேசமிகு...வை.ர... 

Thursday, February 2, 2012

...என் வனத்தின் தேவதைகள்...


                                              

தொப்புள் கொடி
அறுந்தபிறகும்
தொடரும் பந்தம்
தாய்க்கும் சேய்க்கும்
தரணியிலே உண்டு..!
  
இல்லை என்பதே
இங்கு
உறுதி செய்யப்படுகிறது
எல்லோருடைய
காதலிலும்.....

காதல் தன்
அணுக்களை
பிரசவித்துக்கொண்ட
ஒவ்வோர் கணத்திலும்
ஒவ்வோர் நொடியிலும்
ஆணிலிருந்து பெண்ணுக்கும்
பெண்ணிலிருந்து ஆணுக்கும்
பெயர்ச்சி அடைகிறது..
அத்தனை லட்சம்
நரம்புகளும்...
அதனூடான உணர்ச்சிகளும்..

வழிதெரியா பாலைவனத்தின்
பள்ளத்தாக்குகளில்
நீ மின்மினிப்பூச்சியாய்
காற்றில்
அலைந்து கொண்டிருக்கையில்...
நான்
உன் பெயரைச்சொல்லியே
தினம் தினம்
எங்கெங்கோ
தொலைந்து கொண்டிருக்கிறேன்......

காதல்
அத்துணை புனிதமானது
பூஜிக்க விரும்பவில்லை...

பொய்யொன்று
சொல்ல விழைகிறேன்..
மெய்க்காதல் என்று
மெச்சிக்கொள்பவர்களிடம்...

நீ சாப்டா...
நா சாப்ட மாதிரி

நீ தூங்கினா..
நா தூங்கினா மாதிரி

நீ சிரிச்சா....!
நீ அழுதா..!

என்று எப்போதுமே
ஒவ்வாத
சிலவற்றை
உரைத்திடும்போது....!!

காதல் மென்மையானது..
மென்மையிலும்
மிருதுவானது....

இப்பொழுது பிறந்த
சிசுவின்
பிஞ்சுப்பாதங்களை விட
அது
மென்மையானது..

உறக்கமற்ற
பேச்சுக்கள்
வேண்டாம்..
என்னுயிர் நீயே.....!!
உன்னுயிர் நானே...!!
என்று
உரசல்கள்
வேண்டாம்...

நிசப்தமே
துணையாயிருக்கிற
யாருமற்ற பொழுதுகளில்..
அவளைத்தவிர
யாருமற்ற பொழுதுகளில்..
நெருக்கமாயிருந்து
புணர நேர்ந்தாலும்...

காமத்தைக் கடக்காது
காதல்
கரைசேராது...
ஆம்..!
காதல்
அத்துணை புனிதமானது..
உனக்குள்ளே
ஒருமுறை
சொல்லிக்கொள்....!!

காதல்
நெருங்கும்போது
விலகிச்செல்கிறது...

விலகும்போது
அருகி வருகிறது...
                                                                                                     நேசமிகு
வை.ர...




                                                                                                                  
         
   
        

Wednesday, February 1, 2012

...........உருவகம் ............

அன்பின் பரிவர்த்தனைகளுக்கும்
அழுகையில் ஆறுதலுக்கும்
அன்பான
அழகான
அறிவான -தோழி -நீ -வாழி....!!
நேசமிகு
வை.ர..

.........மரண உயில்......

       என் கல்லூரியில் எனது கடைசி நாட்களுக்காய் ......எனது சாசனம்.






நம்முடைய
இறுதிநாள்
நெருங்கிக்கொண்டிருக்கிறது..
மரணம்
நம்மை
வெகுவாக
விழுங்கிக்கொண்டிருக்கிறது....??

இன்னும்
இரண்டு மாதங்கள்
கும்மிருட்டில்
நகர்ந்து சென்று
தொலையப்போகும் சில மணித்துளிகள்....

நெலிந்து போய்
இன்றோ நாளையோ
என நாட்களை
எண்ணிக்கொண்டிருக்கும்
நொடிமுட்கள்.........

நேற்று பார்த்து ரசித்த
நீல வானத்தில்
காணாமற்போன
கருமேகங்கள்...
நட்சத்திரத்திரள்கள்..

விழுவதற்காயும்
மீண்டும் எழுவதற்காயும்
காய்ந்து கிடக்கும்
தாழ்வாரங்கள்.. மைதானங்கள்..
நினைவை விட்டு
நீங்காமல் வலிக்கும்
காய்ந்த பச்சைமரங்கள்
காலடிச்சருகுகள்...

ஓடி ஒளிவற்கென்றே
பருத்த ஆலமரங்கள்..
இங்கும் இருக்கிறேன்
எனக்காட்டி
ஓங்கி உயர்ந்த
பனைமரங்கள்
பச்சைச் செடிகள்
பருவப்பெண்ணின்
இடைக்கொடிகள்.....

புதிதாக
செப்பனிடப்பட்ட
அரங்குகள்
பழசே ஆனாலும்
பார் என்று
அரை நூற்றாண்டை
நோக்கியிருக்கும்
கல்லூரியின்
மதில்கள்..

இவை யாவற்றிலும்
மிச்சமாய்
எடுத்துச்செல்ல
எதுவுமில்லை
எச்சமாய்
இட்டுச்செல்கிறோம்..!!
எங்கள்
நினைவுகளை
ஏகாந்தம் பூசிய
இம்மாலைப்பொழுதில்...!!


நேசமிகு
வை.ர..


........ துருவங்கள்.....

அன்றொரு நாள்
நகரப் பேருந்தில்
நான் கண்ட
நங்கையவள்-அமீலா
நானாக இட்டுக்கொண்டபெயர்
பழை நாவலொன்றில்
படித்ததாக நினைவு.......
திரை மறைத்து
ஒளி மட்டும் தெரியும்
இருவிழிகளை
அன்று
இரண்டாவது நாளாக
காண்கிறேன்...
இன்று
பௌர்ணமி முடிந்த
பின்னிரு நாட்களில்
லேசாகத்
திரை மூடிக்கொண்ட
முழு நிலவு...என
அவளின்முகம்
எனக்கு நினைவு....
ஒற்றைக்காலில்
ஓடையில்
கொக்குநிற்பதுபோல்
நிறகமுயன்றும்
சிறிதேனுமில்லை
இடைவெளி எனக்கு
பேருந்தில்...
அவள்
அமர்ந்திருந்தாள்
ஆகாசமாக...
பெண்களிருக்கை பகுதியில்..
ஒருபோதும் கண்டதில்லை
ஆண்கள் இருக்கை
என தனித்திருப்பதை...
சமத்துவம்
ஆண் பெண்
இட ஒதுக்கீட்டிலில்லை
இருக்கையிலாவது
இருக்கட்டுமே......!!
தாமரை இலையில்
பனி நீர்போல்
ஒட்டியும் ஒட்டாமல்
தாரையாக
கண்ணீர் வெளியேற
வெள்ளி நூல் போல்
விடாமல் பனித்திருந்தது..
வெளிறிய கண்களில்..!!!!
ஏதென்று
புரியவில்லை
கேட்கவும்
துணிவில்லை...
அவள் எனக்கு
மூத்தவள் போல்
காட்சியளித்தாள் ..!!!
சந்தர்ப்பங்கள்
கிடைக்கும்போதெல்லாம்
திரும்பிப் பார்க்கிறேன்
அவள் மனம்
சற்று இறுகித்தான்
போயிருந்தது...!!
சன்னலோர
இருக்கையில்
தென்றல்
அவள் முகம்
வருடிப்போனது ..
சில மணித்துதுளிகளுக்குப்பின்
பேருந்திலிருந்து
வெளியேறினேன்
அப்போது
அவள்
தன்---?உடன்
சமாதான உடன்படிக்கை
பேசத் தொடங்கியிருந்தாள்.....!!!


நேசமிகு......
வை .ர..