Friday, March 27, 2015

திருநெல்வேலி ஹீரோஸ் VS தேனி மேஸ்ட்ரோஸ்,


ஐ.எஸ்.எல்.கால்பந்துப் போட்டிகளின் அலை அடித்து ஓய்ந்திருக்கிற நேரத்தில் மீண்டும் ஒரு கால்பந்துத் திருவிழா களை கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் சத்தமில்லாமல் நடந்துகொண்டிருக்கின்றன. அதுவும் ஆடுவது நம்மூர் இளைஞர்கள் என்றால் கேட்கவா வேண்டும். ஆம் அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து, புதுமையான முயற்சிக்கு வித்திட்டிருக்கிறது கேம்சா வைண்ட் டர்பைன்ஸ் Gamesa Wind Turbines எனும் நிறுவனம்.
கிரிக்கெட், ஹாக்கி, டென்னிஸ் என்று பலவகையான விளையாட்டுகள் இருந்தாலும், மற்ற விளையாட்டுகளைப் போல கால்பந்து இந்தியாவில் பிரபலமாகவில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கிரிக்கெட் மீதான ஈர்ர்ப்பும் ஆர்வமும் இன்னமும் மாறாமல் உள்ளது. அதே நேரத்தில் அண்மையில் நடந்துமுடிந்த ஐ.எஸ்.எல்.கால்பந்துப் போட்டிகள், சென்னையில் மட்டுமின்றி பெருநகரங்களில் பரவலாக கால்பந்து விளையாட்டுக்கென புதிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிவிட்டது. கால்பந்து விளையாடுவதற்கேற்ற உகந்த சூழலும், நல்ல பயிற்சியாளர்களும், ஊக்குவித்து உதவி செய்ய யாரும் இல்லாததால், கால்பந்து சாமானிய மக்கள் மத்தியில் இன்னும் பேசப்படாமல் இருக்கிறது. ஏன் இளைஞர்கள் மத்தியிலும் கூட.
இந்த சூழலில், கால்பந்து விளையாட்டினை ஊரகப்பகுதிகளில் வாழும் இளைஞர்களுக்கும், நகர்ப்புறக்குடிசைப்பகுதி வாழ் இளைஞர்களுக்கும் முறையான பயிற்சியின் மூலம் கற்றுக்கொடுக்க முனவந்துள்ளது, நாக்பூரிலிருந்து இயங்கும், இந்த கேம்சா வைண்ட்ஸ் டர்பைன்ஸ் நிறுவனம். இதன் சார்பில் ஜி.எஸ்.எல்.(GSL) என்றழைக்கப்படும் Gamesa saucer League கால்பந்துப்போட்டிகள் இந்த ஆண்டில் நடைபெற உள்ளன.
மாநில அளவிலும், தேசிய அளவிலும், ஏன் உலக அளவில் கூட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்து இளைஞர்கள் குறிப்பாக ஊரகப்பக்திகளைச் சேர்ந்த கிராமத்து இளைஞர்கள் முத்திரை பதிக்கிறார்கள். ஆனால், கால்பந்து விளையாட்டில் இதுவரை தேசிய அளவில் வீரர்கள் உருவாகியிருக்கிறார்களா என்பது கேள்விக்குறிதான்.
மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் வொர்க் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் திடலில் இந்த ஜி.எஸ்.எல்.போட்டிக்கான துவக்க நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது, முன்னாள் காவல்துறைத்தலைவர் நட்ராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு இளம் வீரர்களை உற்சாகமூட்டினார்.
இந்தியா முழுவதும் பரவலாக அனைத்து மாநிலங்களிலிருந்தும், குறிப்பாக, சென்னையில் உள்ள 945 நகர்ப்புறக் குடிசைப்பகுதிகளில் இருந்தும் இளம் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக தமிழகம் மற்றும் மராட்டிய மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் அதிகமான இளைஞர்கள் அழைத்துவரப்பட்டிருக்கிறார்கள். மொத்தம் 7 அணிகள் இந்த ஜி.எஸ்.எல். கால்பந்துத் தொடரில் பங்கேற்க உள்ளன. தற்போது 6 மாதகால தீவிரமான பயிற்சியில் அணி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 2015 ன் மத்தியில் நடைபெற உள்ள இதன் இறுதிப் போட்டியில், கிளப் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களைச் சேர்ந்த அணிகளுடன் இவர்கள் மோத உள்ளனர். அதற்காகத்தான் இந்த 6 மாதகாலத் தீவிரப்பயிற்சி, தொழில்முறைப் பயிற்சியாளர்களைக் கொண்டு வழங்கப்படுகிறது. உடல் திறனை மேம்படுத்தும் வகையில் நல்ல உணவுப்பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுதல், ஆகியவையும் கற்றுத்தரப்படுகிறது. இந்த நிறுவனமானது SLUM SOCCER SPORTS FOR DEVELOPMENT என்ற அமைப்புடன் இணைந்து சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள இளைஞர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.
படிப்படியாக இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கும் ஜி.எஸ்.எல்.போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, இளைஞர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்கு சென்னையில் இயங்கும் MSSW எனப்படும் அமைப்பானது உதவி செய்கிறது. இந்தத் தொடரில் போட்டிகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பது, வழி நடத்துவது, ஆய்வு செய்து ஆவணப்படுத்துவது, இந்தப் போட்டிகள் மூலமும், பயிற்சிகள் மூலமும் இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள தாக்கத்தை மதிப்பிடுவது ஆகிய பணிகளை மேற்கொள்ள உள்ளது.
திருநெல்வேலி ஹீரோஸ், தேனி மேஸ்ட்ரோஸ், சாந்தோம் சூப்பர் ஸ்டார்ஸ்,பெசண்ட் நகர் பிரேவ் ஹார்ட்ஸ், உடுமலைப்பேட்டை வாரியர்ஸ், என்று வைக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் 7 அணிகளின்  பெயர்களை உச்சரிக்கும்போதே ஒருவித உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.
நம்மூர் பசங்க ஆடப்போறாங்க.. ஜி.எஸ்.எல். போட்டிக்கு நாமும் விசில் போடலாமே!

ரஞ்சித் வைத்தியலிங்கம்



No comments:

Post a Comment