Tuesday, March 26, 2013

..............பின்னிரவின் மிரட்சிகள் ..........


பின்னிரவுகளில் 
மிகத் தாமதமாய் துயிலச் சென்றாலும்.. 
விடுவதில்லாமல் துரத்துகிறது ...
அமானுஷ்ய கனாக்கள்  ...
உலவு  ஊர்தி ஒன்றினை 
மேகப்பரப்பில் மீட்டிச் செல்கையில் 
அது
தீக்குளிப்பு செய்து கொண்டு 
மடிவது போலவும் ..
பின்னொரு நாளில்
உறைந்து போன ஆற்றில் 
எளிய தாக்கையில்
வலிய  மீனினைப் 
பிடிக்க முயல்வதான காட்சியும் 
வருகிறது..

தோள்பட்டையில்..
வயிறு உருண்ட..
 மைனாவைச் சுமந்து கொண்டு
 சில அடி உயரம்
 மேலெழும்பி மெல்லப் 
  பறக்கமுடிவதாயும்...
 கடைசியாய் வந்தது..

கனவுகளினூடாக வரும்
 நிராசைகளும்
 நனவாகாமல்.. நினைவாகுகின்றன..
                                                                                 
                                                                                         நேசமிகு வை.ர..

Thursday, January 10, 2013

.......குழந்தையான தெய்வங்கள் .....


                  குழந்தையிடம் அப்பா சொல்கிறார்...

பேருந்தில் போகும்போது
 வயதைக் கேட்கும்
 கண்டக்டரிடம்
மூன்றுக்கும் குறைவு 
என சொல்ல வேண்டுமாம்...

ஞாயிற்றுக் கிழமை 
வீடு வரும் அங்கிளிடம் 
அப்பா வெளியே போயிருப்பதாய் 
சொல்லவேண்டுமாம்...

குழந்தையாயிருந்த அப்பாவும்
குழந்தையாயிருந்த அம்மாவும் 
அப்படித்தான் சொல்லப்பட்டார்களாம் ..

இன்னொரு வீட்டில் ...

பொய் சொன்னால் 
சாமி கண்ணை குத்தும் என்று ..
சிறுமியிடம் அம்மா சொல்கிறாள் ..
அச்சிறுமியின் 
பாடபுத்தகத்திலும் இருக்கிறது 
''குழந்தைகள் தெய்வத்திற்கு''
 சமம் என்று....
குழந்தைகளான தெய்வங்கள் 
பொய் சொல்லலாம்
 என்பதே 
இன்றும் வழக்கத்தில்  இருக்கிறது ..

                                                                                   நேசமிகு வை.ர ...

Tuesday, October 16, 2012

சென்னைப் பல்கலைக்கழகத்தின் மதிப்பிற்குரிய துணைவேந்தர் 
திரு. திருவாசகம் அவர்களுக்கு பிரியா விடையளித்து இதழியல் மற்றும் தொடர்பியல் துறையின் சார்பாக காணிக்கையாக்கிய வரிகள் ......


தொன்மம் படிந்திருக்கும்
இதழியல் தொடர்பியல் துறை இது ...
உங்களால்தான் 
உயிர்த்தெழுந்தது....

 பதவியேற்ற
 ஒரு திங்களில் 
முற்றம் பிரசவம் ..

கடல் கடந்தும்
பரந்த புகழால் 
பரவசம் ..இது மூன்றாம் வருடம் 
இது உங்களால்தான் சாத்தியம்...
 
நீங்கள் தோள் தூக்கி வளர்த்த 
குழந்தை ''முற்றம்'' 
சுற்றம் எங்கும் 
எங்கள் கரம் பற்றி வரும்.. 
வெற்றிக்கொடி ஏற்றி வரும்..

மாணவர்களுக்கு....

தன்னம்பிக்கை 
தரமான கல்வி 
அதிநவீன வகுப்பறை 
ஆய்வகம்... நூலகம் ...

என்று ....

எல்லாமும் கொடுத்தீர்கள்...!! 
ஆனால் எப்போதும் 
எளிமையாய் நீங்கள் ...!!

மாணவர் குறை களைய
புகார்பெட்டியை 
பதித்தீர்கள் ...அன்று 
புகார்பெட்டி 
பூக்களால் 
நிரம்பியுள்ளது ...இன்று 

நினைவிருக்கட்டும் 
பூக்களல்ல அவை 
எங்கள்  புன்னகை ..!!

திருவாசகத்திற்கு 
உருகாதார்
ஒருவருமில்லை 
திருக்குறள் வாசமாய்
உடனிருப்போம் 
நாங்கள் என்றும் 
உங்களின் பிள்ளை...

நெஞ்சார்ந்த நினைவுகளுடன் ...
இதழியல் மற்றும்  தொடர்பியல் துறை 
பேராசிரியர்கள் ,மாணவர்கள், ஊழியர்கள் 
சென்னைப்பல்கலைக்கழகம் 
சேப்பாக்கம் 
சென்னை 

 

Tuesday, August 28, 2012

.........தோழி என்றறியாதவள்........

காலாற நடந்து 
கனிவாய் பேசிக்கொண்டு 
நெடுந்தூர பயணமொன்றில் 
உன்னோடு வருகிறேன்...

நம்மைக் கடக்கும் 
பேருந்தின் பயணிகளுக்கு 
காதலராய் தெரிந்தோமோ..?
கண்கள் உறுத்தும் 
அவர்களின் பார்வை 
இன்னும் துரத்திக்கொண்டிருக்கிறது..

ஒருவர் மட்டுமே 
செல்ல முடிந்த 
கம்பிகளால் கட்டமைக்கப்பட்ட 
ஒருவழிப்பாதையில் 
நீ முன்னே நடக்கையில்
பின்தொடர்ந்து நான்..

ஐந்தாறுமுறை 
அறுந்துவிட்ட பாதணிகளை 
உயிர்ப்பிப்பதாய் எண்ணிக்கொண்டு 
விடுவதில்லாமல் 
முனை வளைந்த 
ஊக்கினை முயன்று 
இணைக்கப் பார்க்கிறாய்...!

சில நொடிகள் நகர்கையில் 
பழைய நிலைக்கே 
மீண்டுவிடுகிறது... அது.
என் கரம்பற்றி   
 முயற்சித்தும் 
பலனளிக்கவில்லை..

பைக்குள்ளிருந்த 
பழைய செய்தித்தாளில்
இறுதியாய் உன் 
பாதரட்சங்களை
அடக்கம் செய்து 
அதன் சவத்தை 
''உள்ளே வை''
என்கிறேன்...

''செருப்பின்றி நடந்த 
ஞாபகமில்லை'' என்கிறாய்...!!

ஒரு சின்ன யோசனைக்குப் பிறகு ..
என் பாதணியில் 
பாதம் பதிக்கிறாய் ..

அப்பப்பா...!!
அதன் பிறகும் 
எத்தனை வாதங்கள் ...?..!!
நமக்குள் 
வம்படித்துக்கொண்டு...!!
பிரிவுத்துயர் நெருங்குகையில்
நீ பேருந்தில் 
ஏறிக்கொள்கிறாய்..
உன் தடம் பதிந்த 
என் பாதணிகளை 
நீக்கிவிட்டு ..

எப்பவும்போல் 
அர்த்தம் விலகாத 
சிரிப்பொன்றை 
உன்னிடம் பெற்றுக்கொண்டு ..
கால்கள் தேய 
விரைகிறேன் ...நான் 

உன் பாதணிகளின் சவத்தை 
கைகளில் ஏந்திய 
கனத்துடன்..
நேசமிகு...
வை.ர.... 



Saturday, August 11, 2012

............ஒத்தையடிப்பாதையில......

பொட்டல் காட்டின்
ஒற்றையடி செம்மண் பாதை
புழுதி வாரிக்கொண்டு விரையும் 
பேருந்தில் கடக்கும்போது 
கவனிக்க .......
வளைந்த பாதை 
வண்டியின் தடங்கள் போல
நேராகி விடுகிறது
ஒரு சோதனைக்காய்
காலஞ்சென்ற
உழைத்து உலுர்ந்த
எம் முன்னோர்களின் 
பிரேதம் தோண்டப்பட்டபோது ..

இன்றும் அவர்களின் சிதைந்த 
முதுகுத்தண்டானது 
வளைந்து காணப்பட்டது...
அந்த ஒற்றையடிப்பாதை போல..

சிதைந்தது உடல்கள் 
உழைப்பு 
தொடரும் அதன்
தொன்மையான தடங்கள்...

Thursday, July 26, 2012

...........காத்திருப்பின் இலக்கணம்.....

காத்திருப்பின் 
இலக்கணத்தை 
காலம் உணர்த்திப்போனது....

காதல் சொல்லப்படும்வரை
''காத்திராதே ''
என்று........

.................ஒரு ஊர்ல...........


ஒரு ஊர்ல....
ஒரு ராஜா இருந்தாராம்...

ஒரு ராணி...

எப்போதாவது
ஒன்றுக்கும் மேல
மந்திரிகள்......

என்றே..
கதைகேட்டு பழக்கப்பட்ட
பால்யம்,.

பருவமாகி நிற்கும்
இவ்வேளையில்...

தெரிந்தும் தெரியாமலும்
ராணிகள் பலபேர்...

பல என்பதன் மடங்கான 
மந்திரிகள்...

ஆனாலும்...

கதையை இப்படித் 
தொடங்கலாம்
இன்றும்...

''ஒரு ஊர்ல ஒரு
ராஜா'' என்றே.....