Friday, March 27, 2015

என்றென்றும் நன்றியுடன்…





”உம்பர்டோ-டி” என்றொரு இத்தாலியத் திரைப்படம். அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்ற வயது தளர்ந்த முதியவர் ஒருவர், தனக்கு பென்ஷன் கிடைப்பதற்காக தினமும் நடையாக நடந்து அலைந்து கொண்டிருப்பார். குடும்பம், உறவினர்கள் என்று யாருமில்லை. துணைக்கு அவருடன் இருப்பது ஒரு வளர்ப்பு நாய் மட்டுமே. என்னதான் வறுமையில் இருந்தாலும், தனக்கு உணவு கிடைக்காவிட்டாலும் இருப்பதை விற்று நாய்க்கு உணவளித்துவிடுவார். ஒரு நாள் தெருவில் சுற்றித்திரிந்த அந்த நாயை உள்ளூர் நிர்வாகம் பிடித்துக்கொண்டு போய்விடும். விவரமறிந்த அவர் விரைவாக நகராட்சி அலுவலகம் செல்வார்.  கூட்டம் கூட்டமாக நாய்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்க இவரது நாய் அதிர்ஷ்டவசமாக காத்திருப்பில் இருக்கும். ஊழியர்களிடம் எவ்வளவோ கெஞ்சியும் முடிந்தபாடில்லை. இறுதியில் தனது உடைமைகளை விற்று கிடைக்கும் தொகையைக் கொடுத்து அந்த நாயை மீட்டு வருவார்.

”ஹட்சுகோ எ டாக் ஸ்டோரி” என்றொரு சீனத் திரைப்படம். தனது எஜமானரின் மேல் மிகுந்த அன்பு வைத்திருக்கும் நாய், தினமும் அவர் அலுவலகம் செல்லும்போது ரயில்வே ஸ்டேஷன் வரை கூடவே செல்லும். மாலையில் அவர் வீடு திரும்பும்போது அங்கு சென்று அவரைக் கூட்டி வரும். ஒரு நாள் அவர் விபத்தில் இறந்துபோக, அதை உணராத அந்த நாய் தனது எஜமானர் ரயிலில் வருவார் என நினைத்து தினமும், ரயில் நிலையம் சென்று வருவோர் போவோரை எல்லாம் ஏக்கத்துடன் பார்க்கும். இப்படியே 10ஆண்டுகள் கடந்துபோக அந்த நாய் அங்கேயே உயிரைவிட்டது. சீன ரயில் நிலையத்தில் அந்த நாய்க்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. இது உண்மைச் சம்பவம்.

 வெளிநாட்டில் மட்டுமல்ல நம் நாட்டிலும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது உண்டு. வீட்டிற்குள் புகுந்த பாம்புடன் சண்டையிட்டு இறந்து தனது எஜமானரை காப்பாற்றியது ஒரு வளர்ப்பு நாய். இது ஈரோட்டில் நடந்தது.
 நாய், பூனை, முயல் என்று செல்லப்பிராணிகளை நிறைய வளர்த்தாலும் நன்றிக்கு எடுத்துக்காட்டாக நாம் சொல்வது நாய்களைத்தான். அன்பின் பாத்திரமாக விளங்கும் நாய்களை வீட்டின் ஒரு உறுப்பினராக நினைத்து மிகவும் செல்லம் கொடுத்து அதற்குப் பெயர் சூட்டி வளர்ப்பவர்கள் பலர். அவரவவர் வசதிக்கேற்ப வீடு தேடிவரும் நாய்களுக்கு அடைக்கலம் கொடுத்தோ அல்லது விலையுயர்ந்த ரக நாய்களை  விலை கொடுத்து வாங்கியோ நம்மில் பலர் வளர்த்து வருகிறோம்.

ஆனால், இதற்கும் ஒருபடி மேல் போய் தான் வளர்த்த, தன்னோடு பழகிய, பாசத்தைப் பொழிந்த செல்லப்பிராணியான நாய் இறந்தபிறகு அதற்கு நன்றி செலுத்தும் முகமாக அதற்குக் கல்லறை கட்டி வைத்திருக்கிறார்கள் நம்மவர்கள். இது திரைப்படத்தில் அல்ல. நிஜத்தில்…
மைலாப்பூர் இந்துக்கள் இடுகாட்டின் உள்ளே சென்று இடப்பக்கம் திரும்பி நேரே செல்கையில் மனிதக்கல்லறைகளுக்கு மத்தியில் இரண்டு கல்லறைகளைக் கண்டுபிடித்தோம்.

ஒன்று குக்கீ பலராமன்.வயது 10. மற்றொன்று ஸ்வீட்டி(பெண் நாய்). வயது 7.
சென்னையில் மைலாப்பூரில் மட்டும்தான் செல்லப்பிராணிகளுக்கான இந்தக் கல்லறைகள் உள்ளன. இதற்கு அடுத்ததாக தற்போது கண்ணம்மாபேட்டையில் அண்மையில் தொடங்கப்பட்டுள்ள மாநகராட்சியின் விலங்குகள் சரணாலயத்தில் பிராணிகளைப் புதைப்பதற்கான இடம் (Burial Ground) உள்ளது.
ஒரு கால்நடை மருத்துவர், உடன் இரண்டு உதவியாளர்கள் இங்கு பணியாற்றுகின்றனர். தினம்தோறும் தியாகராய நகர் சுற்றுப்பகுதிகளில் களப்பணிக்குச் செல்லும் மருத்துவக் குழுவினர் தெரு நாய்களுக்குக் கருத்தடை சிகிச்சையினை மேற்கொள்கிறார்கள். மாநகராட்சியின் இந்த கால்நடை மருத்துவமையத்தில் நாள்தோறும் பொதுமக்களும் தங்களது வளர்ப்பு நாய்களைக் கொண்டுவந்து தேவையான தடுப்பூசிகளைப் போட்டுச் செல்கின்றனர்.

”இறந்துபோன நாய்களை திறந்த வெளியில் விட்டுவிடுவதால் தொற்று நோய்களும் சுகாதார சீர்கேடுகளும் ஏற்படும். மாநகராட்சியின் இது போன்ற சரணாலயங்களால் அது தடுக்கப்படும். என்கிறார் கால்நடை மருத்துவர் அருண்.
அந்த நாய்களின் கல்லறையில் பொறிக்கப்பட்டிருந்த வாசகங்கள், பார்த்ததும் மனதுக்குள் நெகிழ்ச்சியை உண்டாக்கியது. அதில் உள்ள ஒரு வாசகம்:
The gorgeous A/c crazy and bestest doggy ever-thank you for 10 years of happiness. We miss you so much and will always you. COOKKIE BALARAMAN.

ரஞ்சித் வைத்தியலிங்கம்
புகைப்படங்கள்: ஏ.ஆர்.சரவணன்


நிலவுக்கு அனுப்பலாம் நினைவுப்பொருள்களை..!



கடிதங்கள் அல்லது நாம் சேமித்து வைத்திருக்கும் நினைவுப்பொருள்களை  நிலவுக்கு அனுப்பி வைக்கும்  புதிய சேவையை மூன் மெயில் என்ற பெயரில் அஸ்ட்ரோபோடிக் எனும் அமெரிக்க நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்காகக் குறைந்தபட்சம் 460 டாலர் முதல் 26 ஆயிரம் டாலர் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நிலவின் மேற்பகுதியில் தரையிறங்கும் வகையில் லூனார் விண்கலம் இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலவுப்பகுதியில் வைக்கப்பட்ட நமது பொருள்கள் படம்பிடித்து நமக்கு அனுப்பிவைக்கப்படும். இதற்காக நாசாவுடன் ஒப்பந்தமிட்டுள்ள இந்த நிறுவனம் அடுத்த 2  ஆண்டுகளில் ராக்கெட்டை அனுப்ப உள்ளது

ராக்கெட்டில் சென்று, நிலவின் மேற்பகுதியில் தரையிறங்கும் லூனார் லேண்டர் விண்கலம் ஆனது, அது எடுத்துச்சென்ற பொருள்களை (ஆம்.. நம்முடையதேதான்) நிலவின் மேற்பரப்பில் சேர்த்துவிடும். இந்த சேவை தொடர்பாக அஸ்ட்ரோபோடிக் நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரி ஜான் தார்ண்டன் கூறுகையில்:
அஸ்ட்ரோபோடிக் லூனார் லேண்டர் மூலமாக உலகெங்கிலுமுள்ள தனி நபர்கள் தாங்கள் விரும்பும் நினைவுப்பொருள்களை நிலவுக்கு அனுப்ப முடியும். நிலவின் மேற்பகுதியில் தரையிறங்கும் வணிக ரீதியிலான முதல் சேவை மூன் மெயில் என்ற வரலாற்றை இது உருவாக்கும். இந்த சேவைக்கு குறைந்தபட்சம் 460 டாலர் என நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், காதல், திருமணம், பிறந்த நாள், நினைவுச் சின்னமாக நாம் வைத்திருக்கும் பொருள்கள், அன்பிற்குரியவர்களின் நினைவுப் பரிசுகள் போன்றவற்றை நிலவில் என்றென்றும் நிலைத்து நிற்கச் செய்ய முடியும். ஸ்பேஸ்-10 என்ற ராக்கெட்டின் மூலமாக அனுப்பி வைக்கப்படும் லூனார் விண்கலத்தில் நமது பொருள்கள் அனுப்பிவைக்கப்பட உள்ளது.
 மேலும், நாம் அனுப்பும் பொருள்களுள் மிகச்சிறிய, அதே நேரம் கவர்ச்சிகரமான பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்படும். ஸ்பேஸ்-10 ராக்கெட்டில் மொத்தம் 2 விண்கலங்கள் உள்ளன. ஒரு விண்கலமானது நிலவின் மேற்பகுதியில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மற்றொன்றான போலரிஸ் ரோவர்வகை விண்கலமானது நிலவில் சக்கரங்களின் உதவியுடன் நகரும் வகையில் உள்ளது. புவியின் வளி மண்டல மேற்பரப்பை அடையும் வரையில் இந்த இரண்டு விண்கலங்களும் இணைந்தே இருக்கும். அதன்பிறகே பிரியும். தற்போது ஆன்லைனிலும் நம்முடைய ஆர்டர்களை அனுப்பிவைக்க முடியும். 

நாம் நமது ஆர்டரைக் கொடுத்து அதற்கான கட்டணத்தை செலுத்தியவுடன் மூன் மெயில் கிட் ஒன்று நமக்காக அனுப்பிவைக்கப்படும். அதில் விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ள பகுதியின் புகைப்படம், முதல் வர்த்தக மூன்மெயில் சேவையின் பயனர் நாம் என்பதற்கான அங்கீகாரச் சான்றிதழ் ஆகியவை இதனுள் இருக்கும். நாம் அனுப்பும் பொருள்களானது நிலவில் நிரந்தரமாக விட்டுவரப்படும். நிலவில் தரையிறங்கும் அஸ்ட்ரோபோடிக் தொழில் நுட்பமானது அதிநவீன கேமராக்கள் கொண்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கேனவரல் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஸ்பேஸ்-10 ராக்கெட்டின் மூலம் இந்த விண்கலமானது இன்னும் 2 ஆண்டுகளுக்குள் அனுப்பப்பட உள்ளது. 

நம் எல்லோராலும் நிலவுக்குப் போவது என்பது நிச்சயம் சாத்தியமில்லை. மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டம் கூட 2020 ல் தான் செயல்படுத்தப்பட இருக்கிறது. ஆனால், அதற்கு முன்பாகவே இன்னும் 2 ஆண்டுகளுக்குள் மனிதனின் நினைவுப்பொருள்களைச் சுமந்தபடி நிலவுக்குப் பயணிக்க இருக்கிற விண்கலம் என்றும் நினைவில் நிலைத்து நிற்கும் என்பதில் ஆச்சரியமில்லை.


பி.கு: மூன் மெயிலுக்கு ரிப்ளை வராது…Understand…!!

ரஞ்சித் வைத்தியலிங்கம்

திருநெல்வேலி ஹீரோஸ் VS தேனி மேஸ்ட்ரோஸ்,


ஐ.எஸ்.எல்.கால்பந்துப் போட்டிகளின் அலை அடித்து ஓய்ந்திருக்கிற நேரத்தில் மீண்டும் ஒரு கால்பந்துத் திருவிழா களை கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் சத்தமில்லாமல் நடந்துகொண்டிருக்கின்றன. அதுவும் ஆடுவது நம்மூர் இளைஞர்கள் என்றால் கேட்கவா வேண்டும். ஆம் அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து, புதுமையான முயற்சிக்கு வித்திட்டிருக்கிறது கேம்சா வைண்ட் டர்பைன்ஸ் Gamesa Wind Turbines எனும் நிறுவனம்.
கிரிக்கெட், ஹாக்கி, டென்னிஸ் என்று பலவகையான விளையாட்டுகள் இருந்தாலும், மற்ற விளையாட்டுகளைப் போல கால்பந்து இந்தியாவில் பிரபலமாகவில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கிரிக்கெட் மீதான ஈர்ர்ப்பும் ஆர்வமும் இன்னமும் மாறாமல் உள்ளது. அதே நேரத்தில் அண்மையில் நடந்துமுடிந்த ஐ.எஸ்.எல்.கால்பந்துப் போட்டிகள், சென்னையில் மட்டுமின்றி பெருநகரங்களில் பரவலாக கால்பந்து விளையாட்டுக்கென புதிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிவிட்டது. கால்பந்து விளையாடுவதற்கேற்ற உகந்த சூழலும், நல்ல பயிற்சியாளர்களும், ஊக்குவித்து உதவி செய்ய யாரும் இல்லாததால், கால்பந்து சாமானிய மக்கள் மத்தியில் இன்னும் பேசப்படாமல் இருக்கிறது. ஏன் இளைஞர்கள் மத்தியிலும் கூட.
இந்த சூழலில், கால்பந்து விளையாட்டினை ஊரகப்பகுதிகளில் வாழும் இளைஞர்களுக்கும், நகர்ப்புறக்குடிசைப்பகுதி வாழ் இளைஞர்களுக்கும் முறையான பயிற்சியின் மூலம் கற்றுக்கொடுக்க முனவந்துள்ளது, நாக்பூரிலிருந்து இயங்கும், இந்த கேம்சா வைண்ட்ஸ் டர்பைன்ஸ் நிறுவனம். இதன் சார்பில் ஜி.எஸ்.எல்.(GSL) என்றழைக்கப்படும் Gamesa saucer League கால்பந்துப்போட்டிகள் இந்த ஆண்டில் நடைபெற உள்ளன.
மாநில அளவிலும், தேசிய அளவிலும், ஏன் உலக அளவில் கூட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்து இளைஞர்கள் குறிப்பாக ஊரகப்பக்திகளைச் சேர்ந்த கிராமத்து இளைஞர்கள் முத்திரை பதிக்கிறார்கள். ஆனால், கால்பந்து விளையாட்டில் இதுவரை தேசிய அளவில் வீரர்கள் உருவாகியிருக்கிறார்களா என்பது கேள்விக்குறிதான்.
மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் வொர்க் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் திடலில் இந்த ஜி.எஸ்.எல்.போட்டிக்கான துவக்க நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது, முன்னாள் காவல்துறைத்தலைவர் நட்ராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு இளம் வீரர்களை உற்சாகமூட்டினார்.
இந்தியா முழுவதும் பரவலாக அனைத்து மாநிலங்களிலிருந்தும், குறிப்பாக, சென்னையில் உள்ள 945 நகர்ப்புறக் குடிசைப்பகுதிகளில் இருந்தும் இளம் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக தமிழகம் மற்றும் மராட்டிய மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் அதிகமான இளைஞர்கள் அழைத்துவரப்பட்டிருக்கிறார்கள். மொத்தம் 7 அணிகள் இந்த ஜி.எஸ்.எல். கால்பந்துத் தொடரில் பங்கேற்க உள்ளன. தற்போது 6 மாதகால தீவிரமான பயிற்சியில் அணி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 2015 ன் மத்தியில் நடைபெற உள்ள இதன் இறுதிப் போட்டியில், கிளப் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களைச் சேர்ந்த அணிகளுடன் இவர்கள் மோத உள்ளனர். அதற்காகத்தான் இந்த 6 மாதகாலத் தீவிரப்பயிற்சி, தொழில்முறைப் பயிற்சியாளர்களைக் கொண்டு வழங்கப்படுகிறது. உடல் திறனை மேம்படுத்தும் வகையில் நல்ல உணவுப்பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுதல், ஆகியவையும் கற்றுத்தரப்படுகிறது. இந்த நிறுவனமானது SLUM SOCCER SPORTS FOR DEVELOPMENT என்ற அமைப்புடன் இணைந்து சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள இளைஞர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.
படிப்படியாக இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கும் ஜி.எஸ்.எல்.போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, இளைஞர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்கு சென்னையில் இயங்கும் MSSW எனப்படும் அமைப்பானது உதவி செய்கிறது. இந்தத் தொடரில் போட்டிகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பது, வழி நடத்துவது, ஆய்வு செய்து ஆவணப்படுத்துவது, இந்தப் போட்டிகள் மூலமும், பயிற்சிகள் மூலமும் இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள தாக்கத்தை மதிப்பிடுவது ஆகிய பணிகளை மேற்கொள்ள உள்ளது.
திருநெல்வேலி ஹீரோஸ், தேனி மேஸ்ட்ரோஸ், சாந்தோம் சூப்பர் ஸ்டார்ஸ்,பெசண்ட் நகர் பிரேவ் ஹார்ட்ஸ், உடுமலைப்பேட்டை வாரியர்ஸ், என்று வைக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் 7 அணிகளின்  பெயர்களை உச்சரிக்கும்போதே ஒருவித உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.
நம்மூர் பசங்க ஆடப்போறாங்க.. ஜி.எஸ்.எல். போட்டிக்கு நாமும் விசில் போடலாமே!

ரஞ்சித் வைத்தியலிங்கம்



Friday, December 13, 2013

வாலி... வா... நீ...


எண்பத்திரண்டிலும்
எண்ணிரண்டு பதினாறாய்
எழுதிய பாடல்கள்
சொன்னது... வாலிப வாலி..
பின் ஏன் நீ சென்றாய்...?
விண்ணுலகம் தேடி...

இருதயத்தில் ஈட்டியொன்று  பாய்ந்ததடா...
இடியாயும்  விழுந்ததடா...
அய்யகோ -நீ 
மடிந்ததான செய்தி கேட்டு 
மார்பு துடி துடித்ததடா...!

உன் நுனிவிரல் தொட்டிருந்தால்
எழுத்துக்கிரையாகியிருப்பான்
எமனவன்...
நுரையீரல் தொற்றல்லவா செய்துவிட்டான்
சதிகாரன் சாகக் கிடத்துவிட்டான...

 இருதயத்தில் வால்வு ஒன்று
இயங்க மறுதலித்ததாம்
மருத்துவம் பார்த்திட்ட வைத்தியனுக்கும்
வாழ்த்துப்பா ஒன்று
எழுதிட இசைந்ததாம்...!
இறப்பிலும் இன்முகம் தந்து உவந்ததாம்

ஸ்ரீ ரங்கத்து ராஜன் அவன்
சினிமாவின் ராகம் அவன்
அணுவும் அவன்
அனுபல்லவியும் அவன்
கவிஞர் வாலி... காவிய வாலி ...
கலையுலகின் தோனி..

கரை சேர்ந்திட்டாய்
கண்கலங்க வைத்திட்டாய்
உன் உள்ளங்கையில்
கைக் குழந்தையாய் தவழ்ந்திருந்தோம்
தவிக்க விட்டுவிட்டாய்

வாலி... சீக்கிரம் வா நீ...







 

Tuesday, March 26, 2013

..............பின்னிரவின் மிரட்சிகள் ..........


பின்னிரவுகளில் 
மிகத் தாமதமாய் துயிலச் சென்றாலும்.. 
விடுவதில்லாமல் துரத்துகிறது ...
அமானுஷ்ய கனாக்கள்  ...
உலவு  ஊர்தி ஒன்றினை 
மேகப்பரப்பில் மீட்டிச் செல்கையில் 
அது
தீக்குளிப்பு செய்து கொண்டு 
மடிவது போலவும் ..
பின்னொரு நாளில்
உறைந்து போன ஆற்றில் 
எளிய தாக்கையில்
வலிய  மீனினைப் 
பிடிக்க முயல்வதான காட்சியும் 
வருகிறது..

தோள்பட்டையில்..
வயிறு உருண்ட..
 மைனாவைச் சுமந்து கொண்டு
 சில அடி உயரம்
 மேலெழும்பி மெல்லப் 
  பறக்கமுடிவதாயும்...
 கடைசியாய் வந்தது..

கனவுகளினூடாக வரும்
 நிராசைகளும்
 நனவாகாமல்.. நினைவாகுகின்றன..
                                                                                 
                                                                                         நேசமிகு வை.ர..

Thursday, January 10, 2013

.......குழந்தையான தெய்வங்கள் .....


                  குழந்தையிடம் அப்பா சொல்கிறார்...

பேருந்தில் போகும்போது
 வயதைக் கேட்கும்
 கண்டக்டரிடம்
மூன்றுக்கும் குறைவு 
என சொல்ல வேண்டுமாம்...

ஞாயிற்றுக் கிழமை 
வீடு வரும் அங்கிளிடம் 
அப்பா வெளியே போயிருப்பதாய் 
சொல்லவேண்டுமாம்...

குழந்தையாயிருந்த அப்பாவும்
குழந்தையாயிருந்த அம்மாவும் 
அப்படித்தான் சொல்லப்பட்டார்களாம் ..

இன்னொரு வீட்டில் ...

பொய் சொன்னால் 
சாமி கண்ணை குத்தும் என்று ..
சிறுமியிடம் அம்மா சொல்கிறாள் ..
அச்சிறுமியின் 
பாடபுத்தகத்திலும் இருக்கிறது 
''குழந்தைகள் தெய்வத்திற்கு''
 சமம் என்று....
குழந்தைகளான தெய்வங்கள் 
பொய் சொல்லலாம்
 என்பதே 
இன்றும் வழக்கத்தில்  இருக்கிறது ..

                                                                                   நேசமிகு வை.ர ...

Tuesday, October 16, 2012

சென்னைப் பல்கலைக்கழகத்தின் மதிப்பிற்குரிய துணைவேந்தர் 
திரு. திருவாசகம் அவர்களுக்கு பிரியா விடையளித்து இதழியல் மற்றும் தொடர்பியல் துறையின் சார்பாக காணிக்கையாக்கிய வரிகள் ......


தொன்மம் படிந்திருக்கும்
இதழியல் தொடர்பியல் துறை இது ...
உங்களால்தான் 
உயிர்த்தெழுந்தது....

 பதவியேற்ற
 ஒரு திங்களில் 
முற்றம் பிரசவம் ..

கடல் கடந்தும்
பரந்த புகழால் 
பரவசம் ..இது மூன்றாம் வருடம் 
இது உங்களால்தான் சாத்தியம்...
 
நீங்கள் தோள் தூக்கி வளர்த்த 
குழந்தை ''முற்றம்'' 
சுற்றம் எங்கும் 
எங்கள் கரம் பற்றி வரும்.. 
வெற்றிக்கொடி ஏற்றி வரும்..

மாணவர்களுக்கு....

தன்னம்பிக்கை 
தரமான கல்வி 
அதிநவீன வகுப்பறை 
ஆய்வகம்... நூலகம் ...

என்று ....

எல்லாமும் கொடுத்தீர்கள்...!! 
ஆனால் எப்போதும் 
எளிமையாய் நீங்கள் ...!!

மாணவர் குறை களைய
புகார்பெட்டியை 
பதித்தீர்கள் ...அன்று 
புகார்பெட்டி 
பூக்களால் 
நிரம்பியுள்ளது ...இன்று 

நினைவிருக்கட்டும் 
பூக்களல்ல அவை 
எங்கள்  புன்னகை ..!!

திருவாசகத்திற்கு 
உருகாதார்
ஒருவருமில்லை 
திருக்குறள் வாசமாய்
உடனிருப்போம் 
நாங்கள் என்றும் 
உங்களின் பிள்ளை...

நெஞ்சார்ந்த நினைவுகளுடன் ...
இதழியல் மற்றும்  தொடர்பியல் துறை 
பேராசிரியர்கள் ,மாணவர்கள், ஊழியர்கள் 
சென்னைப்பல்கலைக்கழகம் 
சேப்பாக்கம் 
சென்னை